திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தொடர்பான விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்கள் தவெக மற்றும் அதன் தலைவர் விஜயை பாராட்டிப் பேசி வருவதும், தொகுதிப் பங்கீட்டில் அதிக இடங்களை கோருவதும் திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் ஹபீசுல்லா,
“கூட்டணி என்பது பரஸ்பர மரியாதை மற்றும் பலன் சார்ந்தது. பொதுவெளியில் பேசுவது கட்சி ஒழுக்கத்திற்கு எதிரானது” என்று கருத்துத் தெரிவித்துள்ளதன் மூலம், காங்கிரஸை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதேபோல், திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, காங்கிரஸ் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை அவர் ஏற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்படாததும் ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து பேசியதுடன், அவரை பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டதும் திமுக தரப்பில் அதிருப்தியை அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஏஐசிசி பொறுப்பாளரும், ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவருமான கிரிஷ் சோடங்கர், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். அப்போது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு சுமார் 70 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், தேர்தலில் வெற்றி பெற்றால் மாநில ஆட்சியில் அதிகாரப் பங்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிக இடங்களை கோருவது ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக ஆட்சியில் பங்கு தரத் தயாராக இருப்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையிலேயே இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கவனமாகக் கேட்டறிந்தாலும், எந்தவித உறுதியையும் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தனது தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்த பின்னரே அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவெளியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக இரு கட்சிகளும் தெரிவித்து வந்தாலும், அதிக தொகுதிகள் மற்றும் அதிகாரப் பங்கீடு தொடர்பான கோரிக்கைகள் பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வரும் வாரங்களில் தீவிரமான பேரம்பேச்சுகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
