தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் நேற்று தவெகவில் இணைந்தார். இதையடுத்து, அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களை மீறி ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், மேலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தினாலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பில் மேலும், சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்பாக்கி சி. கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., (சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிமுக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
