வட கொரியாவின் கடுமையான சட்டதிட்டங்களில் இருந்து தப்பித்து, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க கிம் இல்-ஹியோக் மற்றும் கிம் யி-ஹியோக் என்ற இரு சகோதரர்கள் மேற்கொண்ட பயணம் ஒரு சினிமா கதையை விடவும் த்ரில்லானது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு தங்களது தந்தை கண்ட கனவை நிறைவேற்ற, கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஒரு புயல் வீசிய இரவில் இவர்கள் தப்பித்தனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கண்ணில் படாமல் இருக்க, 4 மற்றும் 6 வயதுடைய தங்களது குழந்தைகளைச் சாக்குகளில் அடைத்துக்கொண்டு, கண்ணிவெடிகள் நிறைந்த பாதையைக் கடந்து, மீனவர்கள் போல வேடமிட்டு இவர்கள் படகில் கிளம்பினார்கள். அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த கிம்மின் மனைவியும், பிறக்கப்போகும் குழந்தையின் எதிர்காலத்திற்காக இந்த மரணப் பயணத்திற்குத் துணிந்தார்.
தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தபோது அங்குள்ள கடற்படையினர் இவர்களைக் காப்பாற்றினர். “நாங்கள் சுதந்திரம் தேடி வந்த வட கொரியர்கள்” என்று அவர்கள் கூறியபோது, பல ஆண்டுகால அடிமைத்தனம் முடிவுக்கு வந்தது. தங்களது தந்தையின் சாம்பலையும் கையோடு எடுத்து வந்த அந்தச் சகோதரர்கள், ஒருவழியாகச் சுதந்திரம் அடைந்தனர்.
ஆனால், சோகம் என்னவென்றால், இந்தச் சுதந்திரத்திற்காகப் பல ஆண்டுகள் திட்டமிட்டு உழைத்த தம்பி, தென் கொரியா வந்த 19 மாதங்களிலேயே ஒரு நீர்மூழ்கி விபத்தில் உயிரிழந்தார். பெரும் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றியில் இந்த இழப்பு அந்தப் குடும்பத்திற்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
