ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் தாகத்தோடு வரும் வழிப்போக்கர்கள் மற்றும் வாயில்லா ஜீவன்களுக்காகத் தன் சொந்த செலவில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து, அவர்களின் தாகத்தைத் தீர்த்து வந்த ஒரு பெண்ணுக்கு அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அநீதி இழைத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டும் அந்தப் பெண் வழக்கம் போல தண்ணீர் பந்தல் அமைத்திருந்த நிலையில், அங்கு வந்த அதிகாரிகள் தண்ணீர்ப் பந்தலை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டு, அங்கிருந்த மண்பானைகளை உடைக்கச் செய்துள்ளனர்.

​”தண்ணீரை அரசாங்கமாகிய நாங்கள் வழங்குகிறோம், ஆனால் அதன் நற்பெயர் (கிரெடிட்) உங்களுக்குச் செல்கிறது” என்று கூறி அதிகாரிகள் அந்தப் பெண்ணை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த மனிதாபிமானமற்ற, சுயநலமான செயலால் மனமுடைந்த அந்தப் பெண் கண்ணீருடன் தனது தண்ணீர் பந்தலை மூடியுள்ளார். தாகம் தீர்க்கும் உன்னதமான சேவையிலும் சுய விளம்பரத்தைத் தேடும் அதிகாரிகளின் இந்த மோசமான குணம், இணையத்தில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.