அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தற்போது தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது. உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முழுமையாக மூடுவதாக ஈரான் ராணுவத்தின் ஒரு பிரிவான ஐஆர்ஜிசி (IRGC) அதிரடியாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் சென்றால், அவை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும், அனுமதியின்றி வந்த 3 கப்பல்கள் ஏற்கனவே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஈரான் பகீர் கிளப்பியுள்ளது.

“அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளை அழிப்பதே எங்கள் கடமை” என்று முழங்கியுள்ள ஈரான், மேற்கு ஆசிய நாடுகளில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ள பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் பொதுமக்களை ‘மனித கேடயங்களாக’ பயன்படுத்துவதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் இந்த அதிரடி முடிவால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதோடு, எந்த நேரத்திலும் நடுக்கடலில் பெரும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றமும் அதிகரித்துள்ளது.