ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கி வருகிறது. இந்த மோதலில் சீனா மற்றும் ரஷ்யா நேரடியாகப் போரில் இறங்காவிட்டாலும், ‘ஆக்சிஸ் ஆஃப் எவேஷன்’ என்ற ரகசியக் கூட்டணி மூலம் ஈரானுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் திரைமறைவில் செய்து வருகின்றன.
குறிப்பாக, அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானிடமிருந்து சீனா கச்சா எண்ணெயை வாங்கிக்கொண்டு, பதிலுக்கு டிரோன் தயாரிப்பிற்கான மின்னணு உதிரிபாகங்களையும், தொழில்நுட்பங்களையும் வழங்கி வருகிறது. ஈரானின் ஷாஹெத் ரக டிரோன்கள் ரஷ்யாவால் உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் நிலையில்தற்போது ரஷ்யாவிலேயே ஈரானிய தொழில்நுட்பத்துடன் டிரோன் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அமெரிக்காவின் ஜிபிஎஸ் வசதிக்கு மாற்றாக, சீனாவின் ‘பெய்டு’ செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பை ஈரான் பயன்படுத்துவது அந்த நாட்டு ஏவுகணைகள் துல்லியமாக இலக்கைத் தாக்க உதவுகிறது. ஏவுகணைகளுக்குத் தேவையான வேதிப்பொருட்கள் மற்றும் வெடிமருந்துகளைச் சீனா மறைமுகமாக வழங்கி வருவதால், ஈரானின் ராணுவ பலம் குறையாமல் உள்ளது.
இந்த விநியோகச் சங்கிலியை உடைக்காமல் ஈரானை மட்டும் வீழ்த்துவது கடினம் என்பதால், அதிபர் டிரம்ப் போரைத் தவிர்த்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயல்வதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த ரகசியக் கூட்டணி சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
