அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ‘ஸ்டேட் ஹவுஸ் டிஸ்ட்ரிக்ட் 87’ சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எமிலி கிரிகோரி (40 வயது) அபார வெற்றி பெற்றுள்ளார். அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ‘மார்-ஏ-லாகோ’ இல்லம் அமைந்துள்ள இந்த முக்கியத் தொகுதியில், குடியரசுக் கட்சியின் ஜான் மேப்பிள்ஸை சுமார் 2.4% வாக்குகள் வித்தியாசத்தில் எமிலி தோற்கடித்துள்ளார்.
கடந்த 2024 அதிபர் தேர்தலின் போது இதே தொகுதியில் டிரம்ப் 11% அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்த நிலையில், தற்போது ஜனநாயகக் கட்சி இந்த இடத்தைக் கைப்பற்றியிருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிறு தொழில்முனைவோர் மற்றும் பொது சுகாதார நிபுணரான எமிலி கிரிகோரி, முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியும் மூன்று குழந்தைகளின் தாயுமான இவர், சொத்து வரி உயர்வு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை முன்வைத்துத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக இத்தொகுதியின் பிரதிநிதியாக இருந்த மைக் கருசோ நீதிமன்ற அதிகாரியாகப் பொறுப்பேற்றதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
