மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமி பகுதியில் உள்ள விமான நிலையம் மற்றும் ராணுவ விமானப்படை தளத்தை இலக்காகக் கொண்டு, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய ‘ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல் முஸ்லிமின்’ என்ற தீவிரவாத குழுவினர் நேற்று அதிகாலையில் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கொடூரத் தாக்குதலில், பயங்கர வெடிகுண்டு சத்தங்களும் துப்பாக்கிச் சூடுகளும் அப்பகுதியை உலுக்கின. இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 2 பொதுமக்கள் உட்பட மொத்தம் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக நைஜர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நைஜர் மற்றும் சாஹெல் பிராந்தியத்தில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆகிய இரு போட்டி தீவிரவாத அமைப்புகளுக்கு இடையே 2019 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் எல்லைக் கட்டுப்பாட்டு மோதல்களே இதுபோன்ற தொடர் வன்முறைகளுக்கு முதன்மைக் காரணம் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அதிர்ச்சித் தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாகப் களமிறங்கிய நைஜர் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளுக்குப் பதிலடி கொடுத்து தாக்குதலை முறியடித்தனர். இந்த அதிரடிப் பதில் தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் உயிருடன் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது நியாமி நகரில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, விமான நிலையச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், ராணுவ தளத்தில் உள்ள தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த வார தொடக்கத்திலும் மேற்கு நைஜரில் உள்ள ராணுவ தளங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், சாஹெல் பிராந்தியம் தொடர்ந்து உலகின் மிக ஆபத்தான மற்றும் நிலையற்ற பகுதியாக மாறி வருவது சர்வதேச சமூகத்தரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
