டெல்லியிலிருந்து மேற்கு வங்கம் நோக்கிச் சென்ற மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலின் மாற்றுத்திறனாளி பெட்டியில் வைத்து, 20 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாத அந்தப் பெட்டியில் இக்கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.  ரயில் சென்று கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்த பயணிகள், உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்குத் தகவல் அளித்தனர்; இதனையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகத் தனது கணவரைத் தொடர்புகொண்டு நடந்த கொடூரத்தைக் கூறி உதவி கோரியுள்ளார். ரயில் அலிபுர்துஆர் நிலையத்தை வந்தடைந்ததும், அங்கு காத்திருந்த அவரது கணவர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் அசாம் மாநிலத்தை  சேர்ந்த கௌதம் மஹாத்தோ என்ற நபரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபரைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், மேல் விசாரணைக்காக அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். குறைவான பயணிகள் பயணிக்கும் பெட்டிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும், பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவது குறித்தும் ரயில்வே நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற வன்கொடுமைச் சம்பவம் மேற்கு வங்கம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது