கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, ரீல்ஸ் பார்ப்பது மற்றும் கணவருக்கு உணவு சமைத்துத் தர மறுத்தது போன்ற காரணங்களால் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ்குமார் (24) என்பவரும், ரீமாகுமாரி (20) என்பவரும் காதலித்துத் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்து கொண்டு பெங்களூரு  பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஜூலை 29ஆம் தேதி அன்று ரீமாகுமாரி பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது கணவர் தீரஜ்குமார் தலைமறைவாகியிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பீகாரில் பதுங்கியிருந்த தீரஜ்குமாரை அதிரடியாகக் கைது செய்து பெங்களூரு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன; திருமணத்திற்குப் பிறகு ரீமாகுமாரியின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கணவருடன் பேசுவதைத் தவிர்த்துவிட்டு எப்போதும் செல்போனில் ரீல்ஸ் வீடியோ பார்ப்பதிலேயே முழு நேரமும் கவனம் செலுத்திய அவர், தீரஜ்குமாருடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி, கணவருக்கு உணவும் சமைத்துத் தராமல் தனக்கு மட்டுமே சமைத்துச் சாப்பிட்டு வந்ததுடன், ஊருக்குத் திரும்பிச் செல்லும்படி அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு வேலை முடிந்து திரும்பிய தீரஜ்குமார் உணவு கேட்டபோது, ரீமாகுமாரி சமைக்க மறுத்துவிட்டு ஓட்டலில் வாங்கிச் சாப்பிடுமாறு அலட்சியமாகக் கூறியதுடன், தாம்பத்தியத்திற்கு அழைத்தபோதும் கடுமையாக மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பதிக்கு இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது.

அப்போது ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற ரீமாகுமாரி வீட்டிலிருந்த உருட்டுக்கட்டையால் தீரஜ்குமாரைத் தாக்கியுள்ளார்; இதனால் மனமுடைந்துபோய் வெறிபிடித்த தீரஜ்குமார், துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கியும், பாலிதீன் பையால் முகத்தை மூடியும் கொடூரமாகக் கொன்றுவிட்டு உடலைப் போர்வையால் சுற்றிவிட்டுத் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.