தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததற்கு, இயக்குநர் பா. ரஞ்சித் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 5 இடங்கள் தேவையாக உள்ளன. இதற்கிடையே, நேற்று முன்தினம் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இருப்பினும், பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்தச் சூழலில், தனது ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் எக்ஸ் (X) தளத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

“சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை, ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் இதுவரை அழைக்காதது கடும் கண்டனத்திற்குரியது. மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை மதித்து, எவ்விதக் காலதாமதமுமின்றி தவெக தலைமையை ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும். ஜனநாயகத்தின் நம்பிக்கையையும், மக்களின் வாக்குரிமையின் மதிப்பையும் காக்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.

முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியானபோது விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்த பா. ரஞ்சித், “ஆண்டாண்டு காலமாக சாதி பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முறையையும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.