தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டவுடன் அதன் விநியோகம் தொடங்கும் என்றும் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்று அவர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் உறுதி அளித்தார்.
வழக்கமாக வழங்கப்படும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன், இந்த முறை கூடுதல் பொருட்களும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ரொக்கப் பணமும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ள நிலையில், இது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
