திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தனது அரசியல் பயணத்தைப் பற்றி உருக்கமாகப் பேசினார். மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவுடன் பயணித்த காலங்கள் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒருவரை அரசியலில் அடையாளம் காட்டியதாகவும், ஆனால் அதே நபர் இறுதியில் தன்னையே அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் மறைமுகமாகக் குறிப்பிட்டார். ஆனாலும், அதற்காகத் தான் கவலைப்படவில்லை என்றும், “நல்ல இடத்திற்கு நீங்கள் போங்கள்” என்று அவர் காட்டிய அடையாளத்தையே தான் பாசிட்டிவாகப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பழைய இடத்தில் இருந்திருந்தால் தன்னை இன்னும் பின்னுக்குத் தள்ளியிருக்கக்கூடும் என்றும், ஆனால் தற்போது த.வெ.க-வில் இருக்கும் நீங்கள் தன்னை முன்னால் கொண்டு வந்து நிறுத்தி கௌரவித்துள்ளீர்கள் என்றும் தொண்டர்களிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார். தன்னை இந்த உயரிய இடத்தில் அமரவைத்ததற்காகத் தனது கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய செங்கோட்டையன், த.வெ.க-வில் தனது புதிய பயணம் மிகுந்த உற்சாகத்தைத் தருவதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
