கர்நாடக மாநிலம் கொடாகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் மஞ்சரகி (35). இந்திய ராணுவத்தில் 17 ஆண்டுகள் நாட்டுக்காகச் சேவையாற்றிவிட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்புதான் ஓய்வுபெற்று ஊர் திரும்பியிருந்தார். இவரது மனைவி சுமா (35). சந்தீப் ஊர் திரும்பிய பிறகு, முட்டை கடை நடத்தி வந்த புண்டலிக் டோங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் சுமாவிற்கும் புண்டலிக்கிற்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. சந்தீப் பெயரில் 2 கோடி ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு இருப்பது சுமாவிற்குத் தெரியவந்ததும், கணவரைத் தீர்த்துக்கட்டினால் காதலனும் கிடைப்பான், கோடிக்கணக்கான பணமும் கிடைக்கும் என இருவரும் சேர்ந்து ஒரு கொடூரமான கொலைத் திட்டத்தைத் தீட்டினர்.
கடந்த மார்ச் 13-ல் சந்தீப்பிற்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திய சுமா, நல்ல சிகிச்சை என்ற பெயரில் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு வேலை செய்த ஒரு உறவினரின் உதவியோடு, சந்தீப்பிற்கு ஏற்றப்படும் குளுக்கோஸ்பாட்டிலில் எலி விஷம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை அடுத்தடுத்து கலந்து கொடுத்து, துடிதுடிக்கக் கொலை செய்தனர். பின்னர், சந்தீப் மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடினர்.
இந்தக் கொலையை மறைக்க சுமா, தனது தாயின் உதவியோடு தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகளுக்கு ரூ. 3 லட்சத்திற்கும் மேல் லஞ்சம் கொடுத்து, உடற்கூறாய்வு அறிக்கையையே மாற்றினார். விஷத்தால் ஏற்பட்ட மரணத்தை ‘மாரடைப்பு’ என்று போலி அறிக்கை பெற்று, போலீசாரையும் நம்ப வைத்து வழக்கை மூடச் செய்தனர். வழக்கு முடிந்தவுடன் 2 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தைப் பிரிப்பதில் சுமாவிற்கும், கள்ளக்காதலனுக்கும் இடையே தகராறு வெடித்தது. இந்த ஆத்திரத்தில், அவர்களின் நண்பர் ஒருவர் சமூக வலைதளத்தில்கொலைச் சம்பவத்தை சூசகமாகக் குறிப்பிட்டு ஒரு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
இதைப் பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, சுமா மற்றும் புண்டலிக்கைப் பிடித்து விசாரித்தபோது மொத்த உண்மைகளும் வெளிவந்தன. உடனடியாக சந்தீப்பின் உடல் மாதிரிகள் பெங்களூரு முதன்மை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த பெரும் சதித் திட்டத்தில் லஞ்சம் வாங்கிய தடய அறிவியல் துறை உயர் அதிகாரி நாகராஜ், காவலர் அப்பாசாப் மற்றும் கொலையாளிகளுக்கு உதவியாக இருந்த இடைத்தரகர்கள் என அதிரடியாக மொத்தம் 80 பேரை கர்நாடக போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
