அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 27) அதிகாரப்பூர்வமாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், அடுத்ததாக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வமும் (ஓபிஎஸ்) தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ், அதிமுகவின் பிளவுபட்ட அணிகளை ஒன்றிணைக்கக் கெடு விதித்திருந்த சூழலில், தற்போது தவெகவில் இணைவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரான வைத்திலிங்கம், அதிமுக இணையவில்லையெனில் தங்களது அமைப்பு தனிப்பெரும் கட்சியாக மாறும் என்று அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், ஓபிஎஸ்ஸே நேரடியாகத் தவெகவில் இணையும் முடிவை எடுக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் தமிழக வெற்றிக் கழகம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.