மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தன்னுடைய பெற்றோரிடம் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். அதாவது அப்பகுதியில் உள்ள பெட காட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு அவர் கூறியுள்ளார். ஆனால் அதற்குப் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து சிறுமி அவருடைய தாயிடம் சுற்றுலா அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டதால் சிறுமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார். இந்நிலையில் நேற்று சிறுமி மாடியில் உள்ள கதவு திரையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.