சீனாவைச் சேர்ந்த வாங் என்ற பெண்மணிக்கு, கடந்த ஒரு வருடமாக அவரது கையில் ஏற்பட்ட சிறிய வீக்கம், நாளடைவில் முட்டை வடிவிலான பெரிய கட்டியாக மாறியதுடன் கடுமையான வலியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் ஷென்ஜென் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் அவரது கையில் இருந்த கட்டியை அகற்றினர். அப்போது, அவரது கையின் உள்ளே சுமார் 10 சென்டிமீட்டர் நீளமுள்ள இரண்டு உயிருள்ள ‘ஸ்பார்கேனம்’ (Spargenum) வகை ஒட்டுண்ணிப் புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த ஒட்டுண்ணிகள் மனித உடலின் தசை, கண், நெஞ்சு மற்றும் மூளைப் பகுதி வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தகைய ஆபத்தான தொற்றுக்கு அப்பெண்ணின் சமையலறை பழக்கமே காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அவர் வீட்டில் தவளை இறைச்சியை சமைப்பதற்காகப் பயன்படுத்திய அதே வெட்டுக்கட்டை மற்றும் கத்தியைக் கொண்டு, மற்ற உணவுப் பொருட்கள் மற்றும் சாலட்களையும் நறுக்கியுள்ளார். இதனால் அந்த ஒட்டுண்ணியின் முட்டைகள் உணவின் வழியாக அவரது உடலுக்குள் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. வெறும் டிடர்ஜென்ட் கொண்டு கழுவுவதால் மட்டும் இந்த கிருமிகள் அழிவதில்லை என்பதால், பச்சை இறைச்சி மற்றும் சமைத்த உணவுகளுக்குத் தனித்தனி கத்திகள் மற்றும் வெட்டுக்கட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், சமையலில் தூய்மை மிக அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சீனாவில் இதற்கு முன்பும், முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரமற்ற மழை நீரைப் பருகியதால் பலரது மூளையிலிருந்து புழுக்கள் அகற்றப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
