உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மனிஷ் குப்தா (45) என்ற தொழிலதிபர் அவரது மனைவி நிஹாரிகாவால் கத்தியால் குத்தப்பட்டு, 11 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் பரிசோதனை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2017-ல் திருமணமான இந்தத் தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த மூன்று ஆண்டுகளாக மனைவி நிஹாரிகாவிற்கு ஜம்முவைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் சமூக வலைத்தளம் மூலமாக கள்ளத்தொடர்பு இருந்துவந்துள்ளது.
இது தொடர்பாக தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 5-ஆம் தேதியன்று மொபைல் ஃபோன் விஷயத்தால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த மோதலின் போது, நிஹாரிகாவின் கள்ளக்காதலன் ஃபோன் அழைப்பில் இருந்துள்ளார். அவன் தூண்டியதன் பேரில், நிஹாரிகா சமையலறை கத்தியை எடுத்து கணவர் மனிஷ் குப்தாவின் வயிற்றில் குத்தியதாக, மருத்துவமனையில் மனிஷ் தனது தந்தையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மனிஷின் தந்தை அளித்த புகாரின் பேரில், முதலில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், மனிஷ் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது கொலை வழக்காக மாற்றி நிஹாரிகாவை கைது செய்துள்ளனர்.
மேலும், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நிஹாரிகா தன் கணவர் குடும்பத்தின் மீது பொய் வரதட்சணை புகாரும் அளித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தந்தை உயிரிழந்தும், தாய் சிறைக்குச் சென்றதாலும் இவர்களின் 6 வயது மகன் தவித்து வருகிறான். ஃபோனில் கொலையைத் தூண்டிய கள்ளக்காதலனின் பின்னணி மற்றும் இந்தத் திட்டமிட்ட சதி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
