தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை மல்லேஸ்வரி, நுரையீரல் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக உதவி கோரியுள்ளார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘காதல்’ திரைப்படத்தில், நடிகை சந்தியாவின் தாயாராக நடித்ததன் மூலம் இவர் ‘காதல்’ மல்லேஸ்வரி எனப் பரவலாக அறியப்பட்டார். 90-களில் வெளியான ‘உடன்பிறப்பு’, ‘சேலையம்மா’ போன்ற படங்களிலும், அர்ஜுனின் ‘வாத்தியார்’, ஆதியின் ‘அரவான்’ உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக, நகைச்சுவை ஜாம்பவான்களான கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோருடன் இணைந்து பல நகைச்சுவைக் காட்சிகளிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கடுமையான நுரையீரல் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மல்லேஸ்வரி, கடந்த 20 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தமக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில், தனது சிகிச்சை மற்றும் அன்றாடத் தேவைகளுக்காகத் திரையுலகினரிடமும் பொதுமக்களிடமும் உதவி கோரி அவர் உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:
“என்னை ‘காதல்’ மல்லேஸ்வரி என்று திரையுலகில் அழைப்பார்கள். இதுவரை தமிழ், தெலுங்கு என 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். தற்போது எனக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதால் மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாத நிலையில் இருக்கிறேன். என்னைக் காப்பாற்ற உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.”
முகத்தில் ஆக்சிஜன் முகமூடி அணிந்தபடி அவர் வெளியிட்டுள்ள இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதோடு, நடிகர் சங்கம் மற்றும் திரையுலகினர் அவருக்கு உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
