சிங்கப்பூரில் புறாக்களுக்குத் தீவனம் அளித்த 71 வயது இந்தியப் பெண்மணி ஷண்முகநாதன் ஷாமலாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 2.5 லட்சம் ரூபாய் (3,200 சிங்கப்பூர் டாலர்) அபராதம் விதித்துள்ளது. சிங்கப்பூரின் வனவிலங்கு சட்டத்தின் கீழ் இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டோ பயோ பகுதியில் வசிக்கும் இவர், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஒன்பது முறை புறாக்களுக்கு உணவு அளித்துள்ளார். ஏற்கனவே இதே குற்றத்திற்காக கடந்த 2025-ம் ஆண்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி மீண்டும் மீண்டும் இந்தப் பிழையைச் செய்ததால் இந்த முறை அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய பூங்காக்கள் வாரியம் புறாக்களைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தான் வேலையில்லாமல் இருப்பதாகவும், இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியாது என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இருப்பினும், சட்டத்தை மதிக்காமல் தொடர்ந்து விதிகளை மீறியதால் அவருக்குக் கருணை காட்ட முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. சிங்கப்பூரில் சிறிய விதிகளை மீறினாலும் அதன் விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.