பெங்களூருவில் நடைபெற்ற 22-வது மாநில அளவிலான நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாவட்ட நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தும் பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும், பேராசை காரணமாக முறையற்ற வழிகளில் செயல்படும் நீதிபதிகளைத் துறையை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நீதிபதிகள் நேர்மையாகவும், ஆசை வார்த்தைகளுக்கு இணங்காமலும்செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நீதிபதிகள் வெளிப்புற அழுத்தங்களுக்கு ஒருபோதும் பணியக்கூடாது என்றும், சில நேரங்களில் சக ஊழியர்களிடம் இருந்து வரும் அழுத்தங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தீர்ப்பு வழங்குவதில் சமரசம் செய்துகொள்வது ஒட்டுமொத்த நீதித்துறைக்கே இழுக்கு என்று எச்சரித்த அவர், நீதிபதிகள் தைரியமாகவும் சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என்றார்.
உயர் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களில் முழுமையானவெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் பேசினார். இந்த மாநாட்டில் முதல்வர் சித்தராமையா மற்றும் பல முக்கிய நீதிபதிகள் கலந்துகொண்டனர்.
