மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா பகுதியில் இளம்பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கி, ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், முக்கியக் குற்றவாளி அயன் அகமதுவின் சொகுசு வாழ்க்கை குறித்த புதிய வீடியோக்கள் வெளியாகி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன.
குற்றவாளி அயன் அகமது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள ‘ரீல்ஸ்’ வீடியோக்களில், அவர் விலையுயர்ந்த கார்களில் வலம் வருவது, கையில் துப்பாக்கியுடன் தோன்றுவது மற்றும் கட்டுக்கட்டாகப் பணத்தை வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “இவன் வாழ்க்கையை விட வெற்றியை நேசிப்பவன், கண்டிப்பாக ஏதோ பெரிய காரியம் செய்வான்” என்று ஒரு வீடியோவில் அவர் சவால் விடுவது போலீஸாரை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காய்கறி வியாபாரம் அல்லது சாதாரண வேலைகளில் ஈடுபடும் ஒருவருக்கு இவ்வளவு பெரிய சொத்துக்கள் எங்கிருந்து வந்தன என்பது இப்போது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அயன் அகமது பயன்படுத்திய ‘மஹிந்திரா தார்’ வாகனம் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும், வீடியோவில் அவர் காட்டிய துப்பாக்கி உரிமம் பெற்றதா அல்லது சட்டவிரோதமானதா என்பதையும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் அயன் அகமது மட்டும் தனியாகச் செயல்பட்டாரா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் பெரிய குற்ற கும்பல் அல்லது நெட்வொர்க் உள்ளதா என்ற கோணத்தில் புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவத்தில் சுமார் 180 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும், 350-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், காவல்துறை தரப்பில் இதுவரை 7 பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் உள்ள முரண்பாடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் அயன் அகமதுவின் நிதி ஆதாரங்கள் மற்றும் அவருக்குப் பின்னால் இருக்கும் செல்வாக்கு மிக்க நபர்கள் குறித்து போலீஸார் ரகசிய விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். வரும் நாட்களில் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
