தமிழகத்தில் ஏசி, செல்போன், குளிர்சாதனப் பெட்டி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளின் விலை இந்த மாத இறுதியில் மீண்டும் உயர உள்ளது நுகர்வோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் ஏற்கனவே மூன்று முறை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நான்காவது முறையாக இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது.
மேலும் மெமரி சிப் தட்டுப்பாடு, கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையே இந்தத் தொடர் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. மேலும், ஏசி போன்ற சாதனங்களுக்கான மின் சேமிப்பு விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களும் உற்பத்தி செலவை அதிகரித்துள்ளன.
இதனால் சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் வீட்டு உபயோகப் பொருட்களின் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்கனவே இரண்டு சுற்றுகள் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை உயரப் போவது கோடை காலத்தில் ஏசி மற்றும் பிரிட்ஜ் வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் ஜிஎஸ்டி குறைப்பால் அதிகரித்த விற்பனைத் தேவை, இத்தகைய மூலப்பொருள் விலை உயர்வால் தற்போது சரிவைச் சந்திக்க நேரிடும் என வணிக வட்டாரங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் தங்களுக்குத் தேவையான மின்னணு சாதனங்களை வாங்க நுகர்வோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
