வீட்டை விட்டுத் தப்பிச் சென்று இணையதள மையத்தில் விளையாடிக் கொண்டிருந்த பேரனைத் தேடிச் சென்ற பாட்டி ஒருவர், தவறுதலாக வேறு ஒரு இளைஞரைத் திட்டித் தீர்த்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள ஒரு இன்டர்நெட் கஃபே-விற்கு முதியவர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்தார். வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் தப்பித்து வந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த தனது பேரனைத் தேடியே அவர் அங்கு வந்தார். அங்கு ஒரு இருக்கையில் அமர்ந்து தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்த இளைஞரைப் பார்த்த பாட்டி, அவர் தான் தனது பேரன் எனத் தவறாகக் கருதிவிட்டார்.
அருகில் சென்ற பாட்டி, அந்த இளைஞரை அங்கிருந்த அனைவருக்கும் முன்பாக மிகக் கடுமையாகத் திட்டித் தீர்த்தார். “படிக்க வேண்டிய நேரத்தில் இங்கே என்ன வேலை? எதற்கு இப்படி ஊர் சுற்றுகிறாய்?” என ஆவேசமாகக் கத்தினார்.
பாட்டி திட்டியபோதும், அந்த இளைஞர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை; தன் இருக்கையை விட்டு எழவும் இல்லை. அவரது அமைதியைக் கண்டு பாட்டி மேலும் ஆத்திரமடைந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் தனது முகத்தைத் திருப்பியபோதுதான் பாட்டிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் தனது பேரன் அல்ல, முற்றிலும் யாரோ ஒரு அந்நியர் என்பது அவருக்குத் தெரிந்தது.
متداول في فيتنام 🇻🇳 :
جدة ذهبت لمقهى العاب الانترنت تبحث عن حفيدها الذي تسلل من البيت. وجدته يلعب فقامت بتوبيحه امام الجميعاستغربت عدم ردة فعله وعندما التفت اكتشفت انه شخص آخر، فقامت بالاعتذار وتقبيله. اشاد الناس بأدب ذلك الشخص وكيف حافظ على هدوءه ولم يحاول حتى ايقافها pic.twitter.com/2J3NDixf1Z
— Saif (@diol2n) May 12, 2026
உண்மையை உணர்ந்ததும் பதறிப்போன பாட்டி, உடனடியாக அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டார். தர்மசங்கடத்தில் ஆழ்ந்த அவர், தனது பேரனாகக் கருதித் திட்டியதற்காக அந்த இளைஞரின் நெற்றியில் முத்தமிட்டு தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
வயதானவர் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு திட்டியபோதும், குறுக்கிடாமலும், வாக்குவாதம் செய்யாமலும் அமைதி காத்த அந்த இளைஞரின் நற்பண்பை அங்கிருந்தவர்கள் வெகுவாகப் பாராட்டினர். பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அந்த இளைஞர் ஒரு சிறந்த உதாரணம் எனச் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
