சீனாவில் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மருத்துவ ஆலோசனை, முதலீட்டு டிப்ஸ் மற்றும் கல்வி தொடர்பான தகவல்களைத் தகுந்த ஆதாரங்கள் அல்லது பட்டங்கள் இல்லாமல் பகிரும் ஆயிரக்கணக்கான கணக்குகளைச் சீன இணைய ஒழுங்குமுறை ஆணையம் (CAC) அதிரடியாக முடக்கியுள்ளது. எவ்வித தகுதியும் இல்லாமல் “ஈஸியா பணம் சம்பாதிப்பது எப்படி?” என்பது போன்ற போலி வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
புதிய விதிகளின்படி, முக்கியத் துறைகளில் கருத்துச் சொல்லும் இன்ஃப்ளூயன்சர்கள் கண்டிப்பாகத் தங்களிடம் உள்ள பட்டங்கள் அல்லது உரிமங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், குறிப்பாக இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்கவும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஃப்ளூயன்சர்கள் மட்டுமல்லாது, அத்தகைய பதிவுகளை அனுமதிக்கும் சமூக வலைதள நிறுவனங்களும் இனிப் பொறுப்பேற்க வேண்டும் எனச் சீன அரசு அதிரடி காட்டியுள்ளது.
