இந்தியாவின் ‘ராக்கெட் பெண்மணி’ என்று அழைக்கப்படும் இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரினாத், மங்கள்யான் விண்கலம் ஏவப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் அணிந்திருந்த புடவை, தற்போது அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்மித்சோனியன் விண்வெளி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மங்கள்யான் திட்டத்தில் துணை செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றிய நந்தினி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவில் 14-க்கும் மேற்பட்ட முக்கியத் திட்டங்களில் பங்களித்துள்ளார்.
அதிநவீன விண்வெளி உபகரணங்களுக்கு மத்தியில், இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கடின உழைப்பிற்கும் சாதனைக்கும் அடையாளமாக இந்தச் சிவப்பு மற்றும் நீல நிறப் புடவை உலக அரங்கில் கம்பீரமாக நிற்கிறது.
சிறுவயதில் ‘ஸ்டார் ட்ரெக்’ போன்ற தொடர்களால் ஈர்க்கப்பட்டு விண்வெளித் துறைக்கு வந்த நந்தினி ஹரினாத், செவ்வாய் கிரகத்தை அடையும் இந்தியாவின் கனவை நனவாக்கியவர்களில் முக்கியமானவர். 2013-ல் தொடங்கப்பட்ட மங்கள்யான் திட்டம், இந்தியாவைச் செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமைக்கு உள்ளாக்கியது.
View this post on Instagram
“>
விண்வெளி வரலாற்றில் மிகக் குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி சாதனை படைத்த இந்தியாவின் திறமையை உலகமே வியந்து பார்த்த நிலையில், தற்போது அந்தச் சாதனையின் ஒரு பகுதியாக ஒரு இந்தியப் பெண்ணின் ஆடை சர்வதேச அருங்காட்சியகத்தில் இடம் பிடித்திருப்பது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகக் கருதப்படுகிறது.
