மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஹார்முஸ் நீர்ச்சந்தி பகுதியில் ஒரு புதிய ‘டிஜிட்டல் போர்’ தொடங்கியுள்ளது. இந்த நீர்ச்சந்தியின் வழியாகச் செல்லும் ஏழு முக்கியமான ஆழ்கடல் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களைத் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இனி சர்வதேச நிறுவனங்கள் இந்தக் கேபிள்களைப் பராமரிக்க ஈரானிடம் அனுமதி பெறுவதோடு, “பாதுகாப்புக் கட்டணமும்” செலுத்த வேண்டும் என ஈரான் ராணுவம் நிபந்தனை விதித்துள்ளது.
உலகளவில் தினமும் பரிமாறப்படும் 10 டிரில்லியன் டாலர் மதிப்பிலான நிதித் தகவல்கள் இந்த கேபிள்கள் வழியாகவே செல்வதால், ஈரானின் இந்த அதிரடி முடிவு உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த டிஜிட்டல் பாதையில் ஏற்படும் சிறு தடங்கலும் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அமேசான், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈரானுக்கு ஆண்டுதோறும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மோதல்கள் காரணமாக இந்தக் கேபிள்கள் சேதமடைந்தால், செயற்கைக்கோள் அமைப்புகளால் கூட ஈடுசெய்ய முடியாத அளவிற்கு இணையச் சேவையில் பெரும் முடக்கம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
