சென்னை மவுலிவாக்கம் பகுதியில் வேலை முடித்துவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த கொத்தனார் ஒருவர் மீது, எதிர்பாராத விதமாகச் சாலையில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார கம்பி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்றில் அறுந்து விழுந்த மின் கம்பியை கவனிக்காமல் சென்ற அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிருக்குப் போராடித் துடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்களும் வழிப்போக்கர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளனர்.

​அந்த இக்கட்டான சூழ்நிலையில், அங்கிருந்த நபர் ஒருவர் சற்றும் யோசிக்காமல், அருகில் கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்து வந்து மின்சார கம்பியை அடித்து அகற்றியுள்ளார். அவரது இந்த அதிரடி மற்றும் சாதுரியமான செயலால், மின்சார அதிர்ச்சியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கொத்தனார் பத்திரமாக மீட்கப்பட்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தக்க சமயத்தில் உயிரைப் பணயம் வைத்து, கட்டையால் மின் கம்பியை அகற்றி கொத்தனாரின் உயிரைக் காப்பாற்றிய அந்த நபரின் வீரத்தைப் பாராட்டி ஒட்டுமொத்த பொதுமக்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.