சென்னையைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ராஜேந்திரனின் மகன் வெங்கடேசன் (28) என்ற வாலிபர், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூப்பாண்டித்துரை மற்றும் போலீசார், வெங்கடேசனை விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், அவரது பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் வெங்கடேசனை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்குச் சென்ற வெங்கடேசன் தனது அறையில் படுத்து உறங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று  காலை நீண்ட நேரமாகியும் வெங்கடேசன் எழாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் வெங்கடேசனைப் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வெங்கடேசனின் உடலைக்கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது போலீசார் நடத்திய கொடூரத் தாக்குதலால் தான் வெங்கடேசன் உயிரிழந்ததாக அவரது பெற்றோரும் உறவினர்களும் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், காவல் நிலையம் சென்று திரும்பிய வாலிபர் மர்மமான முறையில் இறந்த விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.