சென்னையைச் சேர்ந்த 38 வயது கூலித் தொழிலாளியான சிவக்குமார் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அண்ணன் விஜய சாரதியுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். அதன் பின்னர், சாலையோரத்தில் இருந்த விஜய சாரதியின் மெத்தையில் சிவக்குமார் படுத்து உறங்கியுள்ளார். தம்பியான சிவக்குமார் தனது மெத்தையில் தூங்குவதைக் கண்டு கடுமையான ஆத்திரமடைந்த அண்ணன் விஜய சாரதி, போதை தலைக்கேறிய நிலையில் இரும்பு கம்பியை எடுத்துத் தூங்கிக் கொண்டிருந்த தம்பியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இரும்பு கம்பி தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த சிவக்குமாரை, அக்கம் பக்கத்தினர் மீட்டுச் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிவக்குமார்,  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் கொடூரக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தம்பியைக் கொலை செய்த அண்ணன் விஜய சாரதியை அதிரடியாகக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.