திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வருகை தந்தார். அப்போது, அங்கு தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ பேனரில் பழனி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே. ரவி மனோகரனின் பெயர் இடம்பெறவில்லை. தனது பெயர் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டு சட்டமன்ற உறுப்பினர் கடும் அதிருப்தி அடைந்த நிலையில், அவரது இச்சம்பவம் குறித்து விழா மேடைக்கு வந்த அமைச்சர் ரமேஷிடம் நேரில் முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக நேரில் அழைத்த அமைச்சர், அரசு பேனரில் சட்டமன்ற உறுப்பினரின் பெயர் விடுபட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டார். மேலும், அரசு நெறிமுறைகளை அதிகாரிகள் மிகவும் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் எக்காரணம் கொண்டும் நிகழக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரமேஷ், விஐபி சலுகைகளைப் பயன்படுத்தாமல், பொது தரிசன வரிசையில் மக்களோடு மக்களாகக் காத்திருந்து சுமார் 2 மணி நேரம் நின்று சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, அன்னதானக் கூடத்திற்குச் சென்ற அவர், பொதுமக்களுக்கான வரிசையில் நின்று டோக்கன் பெற்று, பக்தர்களுடன் எளிமையாக அமர்ந்து உணவருந்தினார். அரசு விழாவில் ஏற்பட்ட சர்ச்சைக்கு உடனடியாகத் தீர்வு கண்டதுடன், மிக எளிமையான முறையில் பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர் சாமி தரிசனம் செய்த இந்தச் செயல் அங்கிருந்த பக்தர்களிடமும் பொதுமக்களிடமும் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றது.