கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் சாதனையாளர்களுக்காக, நாட்டின் மிக உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் மத்திய அரசால் அறிவிக்கப்படுகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுகள், இந்த ஆண்டும் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டன. அதன்படி, இந்த வருடத்திற்கான பட்டியலில் 5 பத்ம விபூஷண், 13 பத்மபூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 விருதுகள் இடம்பெற்றிருந்தன. இதில் முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ஆம் தேதி 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று அதன் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 65 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் பலர் முன்னிலை வகித்தனர். இதில் திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மாதவன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டென்னிஸ் விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜ் ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் மற்றும் பிரபல சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உள்ளிட்ட பல்துறை சாதனையாளர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தினார்.
