விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையே தான் நேரடிப் போட்டி இருக்கும் என்று திட்டவட்டமாகக் கூறினார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அவர், திரையில் தோன்றுபவர்களைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடும் என்றும், ஆனால் அந்தக் கூட்டம் ஒருபோதும் வாக்குகளாக மாறாது என்றும் தெரிவித்தார். மேலும், “புதிய வெளிச்சம்” என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் கட்சிகளுக்குக் களத்தில் பணியாற்ற முகவர்கள் கூட இல்லை என்று அவர் சாடினார்.

​தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால் அதிமுகவை யாராவது அடகு வைத்திருப்பார்கள் என்றும், அவரை மீண்டும் முதலமைச்சராக்குவதே தொண்டர்கள் அவருக்குச் செய்யும் நன்றிக்கடன் என்றும் உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார். லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு திமுகவிற்கு ஆதரவாகத் திருத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், மாணவர்களின் உண்மையான கணிப்புப்படி அதிமுக 180 முதல் 210 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.