புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாஜக அனைத்துப் பிரிவுகளின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பு சுந்தர், எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என்று குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தியின் செயல்பாடுகளைச் சிறுபிள்ளைத்தனமானது என்று சாடினார்.
காங்கிரஸ் வெற்றி பெறும் இடங்களில் மட்டும் வாக்கு இயந்திரங்கள் சரியாக இருப்பதாகக் கூறும் ராகுல் காந்தி, தோல்வியடையும் போது மட்டும் பொய்ப் புகார்களைக் கூறுவதை நிறுத்திவிட்டு உலக நடப்புகளைக் கவனித்து முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். தமிழக அரசியலைப் பற்றிப் பேசுகையில், வரும் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று குஷ்பு திட்டவட்டமாகக் கூறினார்.
மத்திய அரசு தமிழகத்திற்குத் தேவையான அனைத்து நிதிகளையும் சலுகைகளையும் முறையாக வழங்கி வருவதாகவும், ஆனால் எதற்கெடுத்தாலும் நிதி கிடைக்கவில்லை என்று திமுக அரசு பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இறுதியாக, திமுக என்பது வெறும் பாஜகவின் அரசியல் எதிரி மட்டுமல்ல, அது சனாதனத்திற்கும், இந்து மக்களுக்கும், ஏன் கடவுளுக்கே எதிரான ஒரு கட்சி என்று அவர் தனது உரையில் ஆக்ரோஷமாகப் பதிவு செய்தார்.
