பிரான்சில் ஒரு தேவாலயத்தில் நடந்த ஞானஸ்நானச் சடங்கின் போது, இரண்டு வயது குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த 89 வயது பாதிரியார் ஜாக் லாக்ராய்ஸ், அக்குழந்தையின் கன்னத்தில் பலாரென அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான 40 வினாடி வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்குழந்தையை அமைதிப்படுத்தவே தான் அப்படிச் செய்ததாக பாதிரியார் கூறினாலும், வீடியோவில் அவர் குழந்தையைக் கழுத்தைப் பிடித்து இழுப்பதும், பெற்றோர் பதறிப்போய் குழந்தையை மீட்க முயல்வதும் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது.
Priest slaps baby for crying during baptism pic.twitter.com/GCF2tiaITC
— internet hall of fame (@InternetH0F) January 16, 2026
இந்தச் செயலுக்காக அந்தப் பாதிரியார் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, இனி எந்தச் சடங்குகளையும் நடத்தக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளார். “அது அறைவதற்கும் வருடுவதற்கும் இடைப்பட்டது, நான் அக்குழந்தையை அமைதிப்படுத்தவே முயன்றேன்” எனப் பாதிரியார் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், மகிழ்ச்சியாக நடக்க வேண்டிய ஒரு புண்ணியச் சடங்கில் இப்படி ஒரு வன்முறை நடந்ததை ஏற்க முடியாது என பிஷப் கண்டனம் தெரிவித்துள்ளார். வயது மூப்பு மற்றும் சோர்வு காரணமாக அவர் நிதானம் இழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டாலும், இந்த வீடியோ உலகெங்கும் உள்ள மக்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
