உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பர்வார் கிராமத்தில், பெற்ற தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்குத் தயிரில் விஷம் கலந்து கொடுத்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநரான சத்யம் குமார் என்பவருக்கு ஆட்டோ தவணை செலுத்தப் பணம் தேவைப்பட்ட நிலையில், குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் இந்த விவரிக்க முடியாத கொடூரத்தை அவர் செய்துள்ளார்.
வியாழக்கிழமை இரவு இவரது மனைவி சஞ்சு தேவி சூப்பர் மார்க்கெட் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளுக்கும் சத்யம் குமார் தயிரில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதில் மூத்த மகள் தயிர் சாப்பிடாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விஷம் கலந்த தயிரைச் சாப்பிட்ட 8 வயது மகள் பிராச்சி மற்றும் 5 வயது மகன் அக்ஷத் ஆகிய இருவரின் உடல்நிலை மோசமடைந்ததைக் கண்டு, அந்தத் தந்தை அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
உடனடியாக மூத்த மகள் கொடுத்த தகவலின் பேரில், உறவினர்கள் குழந்தைகளை மீட்டு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலை முடிந்து வந்து இந்தத் துயரச் செய்தியைக் கேட்ட தாய் சஞ்சு தேவி மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார். குழந்தைகளின் தாத்தா அளித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த கொடூர தந்தை சத்யம் குமாரைக் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
