தமிழ்நாட்டில் அண்ணாமலை குப்புசாமி திடீரென பாஜகவிலிருந்து விலகி, புதிய தமிழ் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2020 முதல் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அவர், 2026 ஜூன் 5 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த முடிவை பாஜாக தலைமை உடனடியாக ஏற்றுக்கொண்டது.
இருப்பினும், இது அண்ணாமலையின் தனிப்பட்ட முடிவு அல்ல என்றும், தமிழ்நாட்டில் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தாமல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த பாஜகவின் ஒரு தந்திரமான நகர்வு என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றி புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பிராந்தியக் கட்சிகளின் கூட்டணி இல்லாமல் தடம் பதிக்க முடியாது என்பதை பாஜகவின் தேசியத் தலைமை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது. ஆனால், அண்ணாமலை ஆரம்பம் முதலே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் கடுமையாக எதிர்த்து வந்ததால், அவர்களுடன் கூட்டணி வைப்பதற்கு அவர் ஒரு பெரிய தடையாக இருந்தார்.
தற்போது மத்தியில் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கவும், நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆதரவைப் பெறவும் ஸ்டாலினின் திமுக போன்ற பிராந்தியக் கட்சிகளுடன் சமரசம் செய்ய வேண்டிய சூழல் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, வட இந்தியக் கட்சி, இந்தித் திணிப்புக் கட்சி என்ற தனது பிம்பத்தை உடைக்கவும், பிராந்தியக் கட்சிகளுடன் சுமுகமான கூட்டணியை உருவாக்கவும் அண்ணாமலையைத் தற்காலிகமாகப் பின்னுக்குத் தள்ளி வைப்பதே பாஜகவின் தற்போதைய அரசியல் உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
