திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அதிகாலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முகக்கவசம் அணிந்தபடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்து வைப்பதற்காக அர்ச்சகர் ஒருவர் அமைச்சரின் உதவியாளரிடம் கூகுள் பே மூலமாக 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கியது அம்பலமானது.
இதுமட்டுமன்றி, முடி காணிக்கை செலுத்தும் இடத்திலும் ஊழியர்கள் பொதுமக்களிடம் கட்டாயப் பணம் வசூலிப்பது தெரியவந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஊழல் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கோவில் அர்ச்சகர், பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் மற்றும் முடி காணிக்கை பணியாளர்கள் இருவர் என மொத்தம் 5 பேர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, திருச்செந்தூர் கோவில் நிர்வாக அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கோவில் இணை ஆணையர் ராமு சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கும், உதவி ஆணையர் மெய்வேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக, இணை ஆணையர் அருணாசலம் மற்றும் உதவி ஆணையர் லோகநாதன் ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி வரும் 20-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஜெயப்பிரியா, தங்கம், பாஸ்கரன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்து அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
