நாடாளுமன்றத் தேர்தலின் போது தேமுதிக-வுக்கு எம்பி இடங்களைத் தர அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருதாசலம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்த் மேலும் கூறியதாவது,
“விருதாசலம் தொகுதி எம்.எல்.ஏ-வாக எனக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த தொகுதி மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். அண்மையில் சட்டமன்றத்தில் ரத்தன் பண்டிட் விவகாரம் தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, அடுத்த சில நிமிடங்களிலேயே அரசு உரிய நடவடிக்கை எடுத்ததை முழுமனதோடு வரவேற்கிறேன். தமிழக மக்களின் நலனுக்காக அரசு கொண்டு வரும் அனைத்து நல்ல திட்டங்களையும் தேமுதிக எப்போதும் தொடர்ந்து ஆதரிக்கும்.
அதிமுக-வில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தற்போதைய ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால் அதனை நாம் வரவேற்கலாம். அவ்வாறு இல்லாமல், சுயநலத்திற்காகத் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பேரங்கள் நடந்தால், அது தமிழக அரசியல் வரலாறு இதுவரை கண்டிராத மிகப்பெரிய ‘குதிரை பேரத்திற்கு’ வழிவகுத்துவிடும்.
இது குறித்து முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, மக்களுக்கு வெளிப்படையான அறிவிப்பை வெளியிட வேண்டும். அரசியல் களம் நோக்கி வரும் எதிர்கால இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை இந்த அரசு ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேமுதிக-வுக்கு 5 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடமும் தருவதாக அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுக் கொடுக்கப்பட்டது என்பது முற்றிலும் உண்மை. ஆனால், ஒப்பந்தம் செய்தபடி எம்பி இடங்களை தேமுதிக-வுக்குத் தர எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார் என்று சி.வி.சண்முகம் கூறியுள்ள குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மையானது.
கூட்டணி ஒப்பந்தம் செய்துவிட்டு, பின்னர் அதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோது, ‘யார் யாரோ சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது’ என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பொறுப்பற்ற பதில் அரசியல் தர்மத்திற்கு உகந்ததாக இல்லை. இதையேதான் அதிமுக-வைச் சேர்ந்த சி.வி.சண்முகமும் தற்போது சுட்டிக்காட்டியுள்ளார்” என்று பிரேமலதா விஜயகாந்த் மிகவும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அதிமுக-வின் உள்கட்சிப் பூசலுக்கு மத்தியிலும், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்தும் பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாகப் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
