வங்கிகளில் தற்போது காசோலை (செக்) பணமாக்க 2 நாட்கள் வரை பிடித்து வந்தது. சி.டி.எஸ். (Cheque Truncation System) முறையின் சுழற்சி விதிமுறைகள் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டது. இதனால் தனிநபர்கள் முதல் வர்த்தக நிறுவனங்கள் வரை பலரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த நிலையை மாற்றி, காசோலை தீர்வு திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, சி.டி.எஸ். முறையில் ‘ஆன்ரியலைசேசன் சென்டில்மென்ட்’ எனப்படும் தொடர்ச்சியான தீர்வு நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதற்காக இரண்டு கட்டங்களாக மாற்றம் கொண்டுவரப்படுகிறது. முதல்கட்டம் அக்டோபர் 4-ந்தேதி முதல், இரண்டாவது கட்டம் ஜனவரி 3-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய முறையின்படி, வங்கிகளில் பெறப்படும் காசோலைகள் உடனுக்குடன் ஸ்கேன் செய்யப்பட்டு தீர்வு மையத்துக்கு அனுப்பப்படும். அதன்பின், ஒவ்வொரு காசோலைக்கும் வங்கிகள் நேர்மறை அல்லது எதிர்மறை உறுதிப்படுத்தலை வழங்கும்.
இதன் மூலம், அன்றைய தினம் மாலை 4 மணிக்குள் பெறப்படும் காசோலைகள் அன்று இரவு 7 மணிக்குள் பணம் பெறும் வங்கிகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 2-வது கட்டத்தில், காசோலை பெறப்பட்டதில் இருந்து 3 மணி நேரத்துக்குள் அங்கீகாரம் வழங்கப்படும். இந்த மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அவசியமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
