இந்தியாவின் இன்று  சுதந்திர தினம்  (ஆகஸ்ட் 15)  நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பள்ளிகளில் விழா எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சி, எழுச்சி, தேசப்பற்று நிறைந்த நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தை வண்ணக் காகிதங்கள் மற்றும் மலர்களால் அலங்கரித்து, தேசியக்கொடியை மரியாதையுடன் ஏற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழிகாட்டுதலில், பள்ளிகளில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆகியோரை பங்கேற்கச் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை அழைத்து விழாவில் பங்குபெறச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது எனவும், தேசியக் கொடியை தலைகீழாகவோ, கிழிந்த நிலையிலோ ஏற்றக் கூடாது எனவும் பள்ளி கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. தேசியக் கொடியின் மரியாதையை பாதுகாக்கும் வகையில் அனைத்து பள்ளிகளும் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.