அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வுமான சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய அவர், அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் உள்ள தனி நபரின் தவறான போக்கினாலும், தலைமைக்கு எதிராக நிலவும் அதிருப்தியினாலும் தான் கனத்த இதயத்தோடு அ.தி.மு.க-வில் இருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தனது குடும்பமே கட்சிக்காக உழைத்ததாகவும், ஆனால் தற்போது கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்பதையும் உணர்ந்ததாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக விஜயபாஸ்கர் உருக்கமாகக் கூறியுள்ளார். தவெக-வில் இணையப் போகிறீர்களா என்ற கேள்விக்கு, “அது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்” என்று அவர் பதில் அளித்துள்ளார். இவரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வில் இருந்து பதவி விலகிய எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது, இது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.