தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் தகுதியின்மையாக்குதல் விதிகளின்படி, அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அளித்த மனு பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளின் உறுப்பினர்களிடம் விளக்கம் கோரப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தங்களது பதிலை உரிய காலத்திற்குள் அளித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் இது குறித்துத் தொடர்ந்து பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ள விளக்கங்களைப் படித்து, முறையான ஆய்வு செய்த பிறகு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எனக்குக் கால அவகாசம் தேவை; உரிய நேரத்தில் உரிய முறைப்படி தீர்ப்பு வழங்கப்படும்” என்று உறுதியளித்தார். நாளை காலை 10 மணிக்குச் சட்டமன்றம் கூடவிருக்கும் நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.