தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், வருவாய் பற்றாக்குறை ரூ. 78,326 கோடியாக உயர்ந்துள்ளது என்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தவெக அரசுக்குக் கடும் கண்டனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “திமுக அரசு ஏற்படுத்திய நிதிச்சுமையைக் காரணம் காட்டித் தப்பித்துவிட நினைக்காதீர்கள்; அந்தச் சுமையைச் சரி செய்ய உங்கள் கையில் இருக்கும் வழிமுறை என்ன?” என்று முதலமைச்சர் விஜய்யை நோக்கி நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று சுட்டிக்காட்டிய எல். முருகன், “வெள்ளை அறிக்கை மட்டும் போதாது, இந்த நிலையைச் சீரமைப்பதற்கான தெளிவான ‘செயல் திட்ட அறிக்கையை’ (Roadmap) உடனடியாக வெளியிட வேண்டும்” என்று சவால் விடுத்துள்ளார். முந்தைய அரசின் தவறுகளைச் சொல்லியே காலத்தை கடத்தாமல், திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று அவர் தனது ஆவேசமான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.