உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்திலுள்ள காந்தனி கிராமத்தில், மருமகள் ஒருவர் தனது வயதான மாமியாரைக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்தத் தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுமார் 2 நிமிடம் 49 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், மருமகள் தனது மாமியாரான ஷிஷு தேவி என்பவரைக் கீழே தள்ளி, தரதரவென இழுத்துச் சென்று வீட்டின் பல பகுதிகளில் வைத்து கொடூரமாகத் தாக்குகிறார். மேலும், அந்த முதியவரின் கழுத்தை நெரிப்பதோடு, செங்கலால் அவரைத் தாக்கும் கொடூரக் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

“>

இதனால் தாக்குதலின் போது வீட்டில் இருவரும் மட்டுமே இருந்த நிலையில், அந்தப் பாட்டி எப்படியோ தப்பித்து ஓடி உயிர் பிழைத்துள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக முதியவரின் மகனான டிங்கு காஷ்யப், தனது தாயாருடன் சிவில் லைன் காவல் நிலையத்திற்குச் சென்று சிசிடிவி ஆதாரங்களுடன் தன் மனைவி மீது புகார் அளித்துள்ளார். தனது மனைவி அடிக்கடி தாயாரை அடித்துத் துன்புறுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் புகாரைப் பெற்ற காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரிக்கத் தொடங்கிய நிலையில், அதற்குள்ளாகவே இரு தரப்பினரும் தங்களுக்குள் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வந்து சமாதானம் ஆகிவிட்டனர். இதன் காரணமாக காவல் துறையினர் மேல் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றாலும், இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி, முதியவர்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற வன்முறைகள் குறித்து பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.