மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டத்தில் உள்ள பைருந்தா பகுதியைச் சேர்ந்த கௌதம் யாதவ் என்ற கூலித் தொழிலாளி, தள்ளுவண்டியில் ரொட்டிகளைச் சுமந்து சென்று தினசரி நூற்றுக்கணக்கான தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. @sathyashrii என்ற எக்ஸ் (X) கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துப் பாராட்டி வருகின்றனர்.
பகல் முழுவதும் கூலி வேலை செய்யும் கௌதம் யாதவ், மாலை வேளையில் ஓய்வெடுப்பதற்குப் பதிலாக ஒரு தள்ளுவண்டியை எடுத்துக்கொண்டு வீதி வீதியாகச் சென்று “ரொட்டி… ரொட்டி…” என்று குரல் கொடுத்து வீடுகளில் மீதமுள்ள ரொட்டிகளைச் சேகரிக்கிறார். பின்னர் அவற்றைச் சாலையோரம் பசியோடு திரியும் மாடுகள், கன்றுகுட்டிகள், நாய்கள் உள்ளிட்ட தெரு விலங்குகளுக்கு அன்மோடு உணவாக வழங்கி வருகிறார்.
Pure Compassion !!
This man walks door to door collecting rotis so that no cow in the village sleeps hungry 🥹👏👏 May God Bless Him…. pic.twitter.com/kLrPkmnlWr
— SriSathya (@sathyashrii) June 18, 2026
சொந்த வாழ்க்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் கௌதம், சாதாரண ஆடைகளையும் உடைந்த காலணியையும் அணிந்திருந்தாலும், கடந்த 7 ஆண்டுகளாக எவ்வித தொய்வுமின்றி தினசரி சுமார் 300 விலங்குகளின் பசியாற்றி வருகிறார். விலங்குகளுக்கு உணவளிக்கும் போது ரொட்டிகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யும் அவர், அவற்றில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை அகற்றிய பின்னரே விலங்குகளுக்கு வழங்குகிறார்.
கௌதமின் குரல் கேட்டவுடனேயே தொலைவில் இருக்கும் விலங்குகள் கூட அவரிடம் ஓடி வருகின்றன. மக்கள் அவரிடம் ஏன் இதைச் செய்கிறீர்கள் எனக் கேட்கும்போது, “இவற்றைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று புன்னகையுடன் பதிலளிக்கிறார். இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் கண்ட நெட்டிசன்கள், “இதுவே உண்மையான சேவை” என்றும், “இவரே நிஜமான ஹீரோ” என்றும் பாராட்டி வருவதோடு, மற்றவர்களும் இவரைப் பார்த்து விலங்குகளுக்குப் பசியாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
