சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் காந்தி இர்வின் சாலையில் காவல்துறையினர் தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியே வந்த சொகுசு கார் ஒன்றை சோதனை செய்ய நிறுத்தினர். உடனே காரில் இருந்த இருவர் காரை விட்டு வேகமாக இறங்கி தப்பி ஓடி விட்டனர். மேலும் காரில் இருந்த இளம்பெண் மற்றும் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்தது.

மேலும் காரில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மெத்தப்பெட்டமைன் என்ற போதை பொருள் 704 கிராம் இருந்ததும் அதனோடு 6 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த நபர்களில் ஒருவர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பதும் அவர் காய்கறி வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. காரில் இருந்த மற்றொரு இளம் பெண் பெயர் பாத்திமா பேகம் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

இளம் பெண்ணும் அவரது கூட்டாளியான 2 இளைஞர்களும் அசாம் மாநிலத்தில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து பாலசுப்பிரமணியிடம் கொடுத்ததாக தெரியவந்தது. அந்த பெண்ணோடு வந்து தப்பி ஓடிய இரண்டு இளைஞர்கள் பெயர் சாய் தீன் மற்றும் முசாபர் என்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் எழும்பூர் காவல்துறையினர் தங்களது பாதுகாப்பில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய இளைஞர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.