கேரள மாநிலம் பொன்குன்னம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீப்ரா கிராசிங்கில் சாலையைக் கடக்க முயன்ற தேனியைச் சேர்ந்த முருகதாஸ் சங்கர பாண்டியன் (67) என்பவர் ஆம்புலன்ஸ் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி பகவத் சிங் தெருவைச் சேர்ந்த இவர், கேரளாவில் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை 7.50 மணியளவில் பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள சீப்ரா லைனில் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது காஞ்சிரப்பள்ளியில் இருந்து கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸைக் கண்டு, முருகதாஸ் அப்படியே உறைந்துபோய் நடுரோட்டில் நின்றுள்ளார். ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் அவர் சுமார் 10 அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டதாகத் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். உடனடியாக மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
📍Kottayam, Kerala:
A 67-year-old man lost his life after being hit by an ambulance while crossing the road at a zebra crossing near Ponkunnam bus stand. pic.twitter.com/6T5Ag7gLVm— Deadly Kalesh (@Deadlykalesh) February 7, 2026
ஆம்புலன்ஸில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளில், முருகதாஸ் கையைத் தூக்கி ஆம்புலன்ஸைத் தடுக்க முயல்வதும், ஆனால் டிரைவர் அவர் விலகிச் சென்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் வேகத்தைக் குறைக்காமல் வந்ததும் தெரியவந்துள்ளது. காது கேளாமை பாதிப்பு காரணமாக அவருக்கு ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டிருக்காது என்றும் கூறப்படுகிறது. ஒரு உயிரைக் காக்கப் பறந்து வந்த வாகனமே, மற்றொரு உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
