சென்னை குன்றத்தூர் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்த புதுமண தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் வசித்து வந்த விஜய் (25) என்பவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிய யுவஸ்ரீ (24) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 13ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டு குன்றத்தூரில் வாடகை வீட்டில் குடியேறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த யுவஸ்ரீயின் தங்கை வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படாததால், உடனடியாக குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த கட்டிலில் யுவஸ்ரீ உயிரிழந்த நிலையில் கிடந்ததுடன், விஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கியிருந்தார்.
இருவரின் உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக ஆத்திரத்தில் யுவஸ்ரீயை விஜய் கொலை செய்துவிட்டு, பின்னர் பயத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட ஒன்பது நாட்களிலேயே புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
