சென்னை பல்லாவரத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி ஷானா பாத்திமா மீது, அவரது கணவர் முகமது அலி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான். மதுப் பழக்கத்திற்கு அடிமையான முகமது அலி, தொடர்ந்து தனது மனைவியைத் துன்புறுத்தி வந்ததால், அவரைப் பிரிந்த பாத்திமா சட்டப்படி விவாகரத்து பெற முயற்சி செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த முகமது அலி, கடந்த 15-ஆம் தேதி பாத்திமா தனியாக நடந்து சென்றபோது, மறைத்து வைத்திருந்த கழிவறை சுத்தப்படுத்தும் ஆசிட்டை அவர் முகத்தில் ஊற்றி கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
வலி தாங்க முடியாமல் பாத்திமா அலறியபடி ஓடியபோதும், முகமது அலி விடாமல் அவரைத் துரத்திச் சென்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் பாத்திமாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ஆசிட் பட்டதில் அவரது இடது கண் பார்வை முற்றிலும் பறிபோனது.

இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுவிட்டுத் தலைமறைவான முகமது அலியைப் பிடிக்க பல்லாவரம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவனே மனைவியின் வாழ்க்கையைச் சீரழித்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.